உடற்தொய்வை காட்டிலும், மனத்தொய்வுதான் எளிதில் சொக்கி விழச்செய்யவல்லது. அதுவும், நான் பணியாற்றும் AI துறையில், மனத்தொய்வு என்பது, மாற்றவியலாதவொன்று. என்னதான் சென்னையில் கடந்த ஐந்து மாதங்களாக நிலைகொண்டாலும், அலையை பின்னிழுக்கும், வானிலவினைபோல, என்னையும் தென்காற்று அவ்வப்போது தெற்கே இழுத்துக்கொள்கிறது. திரும்பி வரும் அலையின் பாய்ச்சலை போல, மனத்தொய்வு நீங்கி, மீண்டும் சென்னை செல்கிறேன்! தென்னகத்தை, என்னகத்தே சுமந்தவாறு... எப்படியும் அடுத்தவாரம் கொடை விழாவிற்கு வரத்தானே போகிறேன். கொடைவிழா முடிந்து குற்றால குளியல் போட்டால், மனத்தொய்வு மாயமாவது திண்ணம்!
சில கிறிஸ்தவ பாதிரிமார்கள் போதிக்கையில், ஞாயிற்று கிழமையை, ஓர் ஆவியில் நிரம்பும் நாள் என்றும், அந்த ஆவியில் நிரம்பினால், மீதமுள்ள ஆறு நாட்களுக்கு ஆவி குளிரும்படி ஆனந்தம் என்றும் கூறக்கேட்டுள்ளேன். ஓய்வுநாள் யாவருக்கும் அவசியந்தான்! விவிலியம் காட்டும் எறும்புவமை எத்தகையது! நீடித்த உழைப்போடு, ஓய்விற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவது சால்பு. இது ஒரு Battery Charging Day போன்றதாம். 7th Day Adventist-களுக்கு, அது சனிக்கிழமை!
ஆன்மீகங் கடந்து, அனைவருக்கும் தேவையானது ஓய்வுநாள்! வாரத்தில் ஒரு நாளை ஓய்வுநாளாக்கி, ஆவிகுளிர ஆவியில் நிரம்புங்கள்! அந்த ஆவி, குற்றால அருவியோ! இல்லை, குளிர்மிகைத்த தென்றலோ! உங்கள் மனதிற்கு, இதம் தருவதே, உங்களை ஆனந்தத்தில் நிரப்பும் அந்த ஆவி!
இத்தனை தத்துவத்தை நான் இந்த நள்ளிரவில் பொழிகிறேன்! ஏன்!? நள்ளிரவில் எழுந்து, தூக்கங்களைந்தால், எண்ணிக்கொள்ளுங்கள்! செயற்கரியனவற்றை செய்வதற்கான நேரத்தில் உள்ளீர்கள் என! (நீங்கள் நினைக்கலாம்: நாங்க ஏன்டா நடுராத்திரி எந்திக்கணும்?) நள்ளிரவில் மனங்கொண்டுள்ள எண்ண வெறுமையே இதற்கு காரணம் என்பது என் முடிபு. சென்னையில் இருந்து, திருநெல்வேலி விரைந்த ஒரு நாளன்று, பேருந்திலிருந்தவாறே மடிக்கணினியில் என் வேலையை பார்த்துக்கொண்டிருந்தேன். 3 மணிநேரங்கழித்து, மனத்தொய்வு தொற்றியது. மடிக்கணினியை மடித்து வைத்துவிட்டு, களைப்பாறி உறங்கினேன். பின்னர் ஒருமுறை, பின்னிரவில் எழுந்தபோது, ஏதோ ஒரு புது ஊக்கம். அது, மீண்டும், மடிக்கணினியை திறக்குமாறு மனத்தை பணித்தது. இதுதான் அது! இதுதான் இன்று என்னை இந்த கட்டுரையை கட்ட பணிப்பதும்! வேறு எது!? மனம்தான்! மனமேதான்! ஆனால், நிலை மாறிய மனம்! சோர்ந்த மனம், தூக்கத்திற்கு பின்னர், சக்தி கோர்ந்த மனமாகிவுள்ளது. நள்ளிரவு ஏனோ, மனத்தை மேலும் ஊக்குவிக்கிறது.
எதை எழுதபோகிறேன்? AriZone என பெயர்வைத்ததனால், இந்த Zone அரியை விவரிக்கவேண்டும். அரி, AI-யின் பால் கொண்டிருக்கும் அதீத ஆர்வத்தால், AriZone என்பது, அரியின் Reality(R)-யை இழந்து, AiZone ஆக மாறிவிடக்கூடாது என்பது, AriZone மற்றும் AiZone என்ற வார்த்தை விளையாட்டை கண்டதால், வேண்டுமென்றே இங்கு எழுதப்படும் ஒரு வாக்கியம்! இருக்கட்டும், சற்று இடந்நிரப்ப!
இன்று நடந்ததையே எழுதுகிறேன்! இனி நடப்பதையும் எழுதுகிறேன்! என்னை Nostradamus போல் எண்ணவேண்டாம். என் வாழ்க்கை பக்கங்களில் இனி அவ்வப்போது நடக்கும் ஆர்வமூட்டும் விடயங்களையும், முன்னர் நடந்த மனம் நீங்கா காரியங்களையும் இந்த சிறு பக்கத்தில், சேகரிக்க சிறுவுளங்கொள்கிறேன் என கூறுகிறேன்.
ஊருக்கு வந்து இரண்டு வாரங்கள் ஆயினும், இன்னமும் நான் வழக்கமாக சென்று சற்று அயர்ந்து உறங்கும் ஆலமரத்தடிக்கு செல்லாமல் இருந்தேன்! நீலிக்கு கள்ளியே சாட்சி என்பதைபோல, என் கடந்தகாலத்திற்கு , அந்த ஆலமரத்தடியே சாட்சி! புத்தகப்பையுடன் பல நாட்கள்! புற்றீசல் வறுவலோடு சில நாட்கள்! ஈரமழையோடு பல நாட்கள்! ஈந்தம் பயிரோடு சில நாட்கள்! சிறு கண்ணீருடன் பல நாட்கள்! பெருத்த அழுகையோடு ஒரு நாள்! பங்குனியில் ஆண்டுகழிந்து, உத்திரத்தில் ஐயன் உதிக்கும் முன்னரே, உதிரத்தை பாலாக்கி தந்தவளின் அன்பையும் மறைத்து என்னை வளர்த்த தந்தையின் தாய் அவள், உலகை விட்டு நீங்கியிருந்த அந்த ஒரு நாள்! கொடும் மனவேதையில் செந்நரம்புகள் கண்நிரம்பி, செல்ல கால்வராமல், செறுமிக்கொண்டிருந்த அந்த ஒரு நாள்!
"போவோம்", என்று ஒருவழியாக மனம் ஒத்திசைந்தது. மாலைக்கருக்கல், 5 மணியளவில், இரண்டு மறுகால் ஓடையையும் கடந்து சென்றேன். கீழமறுவா, மேலமறுவா என்பவை அவற்றின் பெயர்கள். சிறு வயதில், நீர் வராத காலங்களில் குட்டிப்பாம்புகளை பார்த்தும், நீர் வரும் காலங்களில் கூனிப்பொடிகளை (கூனி இறால்) பிடித்தும் விளையாடிய தனிப்படலம் உண்டு. ஓடைகள் இரண்டிற்கும் நடுவே, ஊடே கீறல் விழுந்த, ஒரு மரத்தடி மாடன் கோயில். அவருக்கு, சப்பானி மாடன் என்று பெயர். அவரை நான் பார்த்ததில்லை. அவர், ஒரு ஒழுங்கற்ற கல்லாகவே நிற்கிறார். அவரை பற்றிய கதைகளை, என்னை வளர்த்தவள் எனக்கு உறங்கும் முன்பு கூறுவது வழக்கம்.
கீழமறுவா ஓடையை தாண்டினால், அங்கு வேறொருவரின் ராச்சியம். அவர் பெயர், ஈந்தடி மாடன். காட்டூரில் சப்பானி மாடன்! கரும்பனூரில் ஈந்தடிமாடன்! இந்த ஈந்தடிமாடனுக்கு இளையார் ஒருத்தர் உண்டு! அவர் பெயர், நொச்சியடிமாடன்! அம்பாசமுத்திரம்-ஆலங்குளம் சாலையில், ஆலங்குளம் அருகே, காளாத்திமடத்தில், நொச்சிமர அடியில் நிலையங்கொண்டவர். சென்னைக்கு செல்லும் போதெல்லாம், கந்தவேல் மினிபஸ், காட்டூர்-கரும்பனூர்-காளாத்திமடம் கடந்து, அம்பை-ஆலங்குளம் சாலையில் இணையும். அந்த இணைப்பில், நொச்சியடி மாடன், முட்டைக்கண்களோடு, முகம் மலராமல் என்னை ஒவ்வொரு முறையும் வழியனுப்புவார். நொச்சியடிமாடன், கொஞ்சம் வசதிபடைத்தவர். வேம்படியிலிருக்கும் சப்பானிமாடனுக்கு, கருங்கல்! ஈந்து சூழ்ந்த ஆலடியிலிருக்கும் ஈந்தடிமாடனுக்கு, பீடம்! நொச்சிமரஞ்சூழ்ந்த நொச்சியடிமாடனுக்கு கற்சிலை! கச்சிதமாக உயர்ந்த ஆலயம்!
சப்பானி மாடன் அருகே செல்வதெல்லாம், எப்போதாவதுதான்! ஊரே வரி பிரித்து கிடா வெட்டும் நாள் ஒன்று! ஒரு குடும்பம் மட்டும் தனியாக சென்று கோழி நேமிதம் செய்யும் நாள் ஒன்று! சிறு வயதில், கோழி நேமிதம் செய்பவர்களோடு சென்றால், கட்டாயம், சுட்டக்குடல் கிடைக்கும். கோழியை தலைத்திருகியபிறகு, நானும் என் மச்சான்மார்களும் அமர்ந்து, இறகு ஆய்வோம். அதை அறுக்கும் பக்குவமெல்லாம் என் மச்சான்களுக்கு அத்துப்படி! குடலை சுத்தமாக கழுவியதும், ஓலையை குவித்து, கொழுத்தி, குடலை சுட்டுவிடுவோம்! அதை, சப்பானிமாடன் முன்பு படையலாக்க முயல்வோம். அவர், பெரிய மனத்துடன், முழுவதையும் எங்களுக்கே தந்துவிட, யார் அதிக வேலை செய்தார்கள் என்பதற்கேற்ப, சுட்டு, சுருண்ட குடலை, நிமிழ்த்தி நீளம் பார்த்து பகிர்வோம்! இருப்பினும், வேகமாக ஒருவர் உண்டு முடித்துவிட்டால், இன்னமும் உண்பவர் மற்றொருவருக்கு ஊட்டுவது வழக்கம்! என்னே ருசி அது! நாக்கில் நீர் தான் போங்க! சுட்ட குடலைவிட, சுவை கூடிய ஒன்று உண்டு! அதுதான், சுட்ட கல்லாளி! அதை பற்றி, பிரிதொருநாள் எழுதுவோம்!
கீழமறுவா ஓடையை தாண்டியதும், பாறை நிறைந்த பரப்பில் 700m நடந்து, ஆலமரத்தை அடைய வேண்டும்! பக்குவப்படாமல் நடந்தால், பாதம் பிறழ்ந்து, பல் உடைவது உறுதி என்பதற்கு, என்னை பார்க்க வந்த ஓரிரு நண்பர்களே சாட்சி! இல்லையேல், சற்று சுற்றி நடக்கவேண்டும்! இங்கு, நான் முதன்முதலாக நீச்சல் கற்றுக்கொண்ட குளமாகிய, சாமியார் குளம் உள்ளது. மழை காலங்களில், பல ஊற்றுக்கண்கள் திறந்து, சுத்தமான நீரை இந்த குளம் தன்வயப்படுத்தும். பல முறை, பெரிய பாம்புகளையும் இந்த குளத்தில் பார்த்துள்ளேன். பரிதவித்த ஒரு மயில் குஞ்சை, இந்த குளத்தினுள் குதித்து காப்பாற்றியும் உள்ளேன். இந்த குளத்தின் மண்ணெடுத்து அம்மன் சிலையும் செய்துள்ளேன். வற்றிய காலங்களில், இந்த குளத்தின் மடியில், வானம் பார்த்து படுத்தும் உறங்கியுள்ளேன். ஆலமரத்தை அடைந்ததும், ஒருவித சிறு புன்னகை, தானே வந்தது! என் வாழ்க்கை புத்தகத்தின் பல பக்கங்களை படித்தது இந்த ஆலமரமல்லவா!
ஆலமரத்து அடியில், இல்லை, அதன் மடியில் படுத்தவாறே, விண்ணை நோக்கினேன்! நான் அழுதிடுவேன் என இலைகளும் கிளைகளும் மறைத்தபோதும், வளர்த்தவளின் முகம் அவற்றையெல்லாம் தாண்டி வந்துபோனது! கண்ணீரும் வந்துவிட, சிறு காற்று ஒன்றும் தேற்றும் வண்ணம் வந்தது! காற்றடித்த திசையில் திரும்பி பார்த்தால், அங்கே என் கண்களின் கருவிழிகளை விரிக்கும் வண்ணம், ஒன்று இருந்தது!
வீறிட்டேன்! விரைந்தெழுந்தேன்! வெயில் காலங்களில் ஆவாரஞ்செடிகள் மலர்வெடித்து சிரிக்கும்! அதுபோல மழை காலங்களில், இந்த செங்காந்தள் செடிகள் கிழங்கறையை விட்டு, சூரிய ஒளிக்காக மேலெழும்பும். முற்றிலும் நச்சு எனினும், இந்த கொடியின் மீது அப்படியொரு ஆர்வம்! ஈர மண்ணில் வளரும்! அது ஈழக்கொடியில் மலரும்! அக்கினி போல பூத்து நிற்கபோகும் இந்த காந்தளுக்கு, சிறு வருடலால் ஊக்கம் அளித்துவிட்டு, ஈந்தடி மாடனை பார்க்க விரைந்தேன்.
அங்கு, மற்றொரு பெயரிலாத சிறு ஓடை ஒன்று உண்டு. அது முழுதும், ஈரமண் என்பதால், கொளுஞ்சி செடிகள் ஆங்காங்கே எட்டிப்பார்த்தபடி இருக்க, நான் எட்டுவைத்து நடந்தேன். அமைதி சூழ்ந்த ஆலமரம்! அதன் அடியில், நான்கைந்து பீடங்கள்! ஒவ்வொன்றிலும், ஐயம்பந்தி கூட்டங்களின் சிறு அங்கங்கள்! இவர்களுக்கெல்லாம், ஈந்தடிமாடன் தான் எசமான்! அந்த இடத்தில், அவர் தான் ராசமன்னர்! உள்ளே நுழையும்போது, பல வருடங்களுக்கு முன்பு, அதிகாலையில், அந்த கோயிலிலிருந்து நான் மனவேதனையோடு வெளியேவர, என்னை கண்டதும் திடுக்கிட்டு பதநீர் இறக்கவந்த தாத்தா, மிதிவண்டியை போட்டுவிட்டு ஓடிய ஒரு காட்சி நியாபகம் வந்து, மென் சிரிப்பில் ஆழ்த்தியது. சிரித்தபடியே மாடன் அருகே செல்ல, "ஒன்ன பல நாழிய பொட்டுபோல பாத்தவன் இங்க நிக்கேன்! நீ, பட்டணம் போறியா பிலே!", என்று அவர் கேட்பது போன்ற ஓர் உள்ளுணர்வு வந்து, சற்றே மனத்தை உரையவைத்தது. இந்நேரம், ராஜாவின், "எங்கே நான் போனா என்ன, எண்ணம் யாவும் இங்கேதான்", என்ற வரிகளை போட்டு, மாடனிடம் காட்டியிருக்கவேண்டும். நானோ, மலைத்தவாறே, மாடனை கொஞ்சிவிட்டு நகர்ந்தேன்!
பக்கத்தில், கரும்பனூரின் மயானம்! அங்கேயும் ஆலமரங்கள் உண்டு! ஓர் அடிபம்பும் கூட உண்டு! புழுங்கி அவிந்தால், அது ஆகும்! அருகிருக்கும் எரிமேடை நிலையத்தில் அமர்ந்தால், அங்கு இருக்கும் ஓர் அமைதி, வேறு எங்கும் கிடைப்பதில்லை. அசையாத ஆலம் இலைகள், எதை சொல்லத் துடிக்கின்றன? எங்கும் வீசிய காற்று, இங்கு மட்டும் ஏன் அமைதி காக்கிறது? உறங்குபவர்களை உசுப்ப விரும்பாமலா? இல்லை, பல ஓலங்களை கேட்டு கேட்டு, அடங்கியதனாலா!? மெல்ல அவ்விடத்தைவிட்டு, வெளியேறி, முகப்பில் இருந்த சூந்துப்புற்களை சற்று பறித்து, வாயில்போட்டு மென்றவாறே நடைகொண்டேன்.
சூந்துப்புற்கள், Lime Grass-க்கு இணையானவை. கார்த்திகையில் சொக்கப்பனையோடு, சோடிப்பனையாக இவையே சேர்ந்தெரியும்! இவை, சுவையானவை! வாய்க்கு மணம் தருபவை! மெல்ல மெல்ல, எச்சில் சுரப்பவை. மாலையில்தான் சவைத்தேன்; சுவைத்தேன். இப்போதும் கூட (1:47 am), சுவை நாவிட்டு நீங்கவில்லை. அதை சவைத்தவாறே, நடந்தால், ஏனோ வேகமாக நடக்குமாறு ஒரு வெறியேறும். இது, தன்னை ஒரு நாயகன் போல, ஆளில்லாத அந்த உலகில் தனக்கு தானே மனதிறுத்தி கொள்ளும் ஓர் அற்ப ஆனந்தம்! வேகமாக நடந்தேன்! சிறுவயதில், மிதிவண்டியில் பள்ளியிலிருந்து வரும்போது, சாலையில் யாருமில்லாத நேரத்தில், இந்த அற்ப இன்பத்திற்கு ஆசைப்பட்டுதான், வேகமாக ஓட்டி, பின்னர் அதை அங்குமிங்கும் திருப்பி, பின்னர் சிலுவை மொடங்கி எனப்படும் இடத்தில், பாறையில் மோதி மூட்டை பெயர்த்துக்கொண்டேன்.
ஆனால், இன்றைக்கு நடந்தது, சற்று வித்தியாசமானது. என் வேகத்திற்கு ஈடு யார் கொடுப்பார்கள்! மெல்லும் புற்கள், என்னை துள்ளச்செய்கின்றன! கள்ளி மரங்கள் இடைமறித்தால் என்ன!? அவை என்ன கோங்குமார்களா என்று அவற்றை தள்ளியபடியே மேலும் நடந்தேன். ஒரு சிறு அடர்ந்த பகுதியினுள் நுழைந்த உடனே, வேகத்தை கட்டுபடுத்தினேன். ஏனென்றால், என் வலப்புறத்தில் ஒரு புதைகுழி! புதைகுழியென்றால், புதைமணலோ/கசமோ இல்லை! ஒருவரை புதைத்த இடமே புதைகுழி! அதற்கு அடையாளமாகவும், புதைத்த உடலின் வாடை வெளியேறாமல் இருப்பதற்காகவும், அந்த இடத்தை சற்று மேடாக்கி, அதில் சுண்ணாம்பு பூசி, ஒரு சிறு கலையத்தையும் (பானை) அதேவாக்கில் சுண்ணாம்பு தடவி தலை பகுதியில் கவிழ்த்து வைப்பது வழக்கம். அதனருகே, பிரண்டையை வளர்த்துவிடுவர். அந்த பிரண்டை தழைப்பதுபோல, மாண்டாரின் வம்சம் தழைக்குமென வளர்த்தவள் கூறிய நியாபகம்.
புதைகுழியை பார்த்ததும், என் கால்கள் நின்றன. ஆனால், ஏதோவொன்று சரியில்லை! கீழே பார்த்தேன்! நான் நின்று கொண்டிருந்ததும் ஒரு புதைகுழியின் மீதுதான்! ஆனால், பல நாட்களுக்கு முந்தைய புதைகுழி! பிரண்டை இல்லாமல், ஆங்காங்கே எப்போதோ தடவிய சுண்ணாம்பு மட்டும் தெரியும் வண்ணம் அது தென்பட, உடனடியாக கீழிறங்கியநான், அதன் தலைக்குமாட்டில், "மாப்பு கொடுத்துருங்க" என்று கூறியவாறே வழக்கமான நடையில், பிரிதொரு ஆலமரத்திற்கு சென்றேன். இந்த மரம், விளையாட ஏற்ற மரம். இங்கிருக்கும் விழுதுகள் வலுவானவை. அந்த பெயரில்லாத ஓடை, இதை அணைத்து செல்வதால், அதன் கரையில் ஏறி இறங்கவேண்டும்.
எனினும், அதற்கு சற்றே முன்னதாக, ஒரு சிறு கிணறு ஒன்று உண்டு. அதற்குள் உற்று நோக்காமல், வீடு திரும்பினால், உறக்கம் இல்லாமல், மீண்டும் இரவு வரவேண்டியிருக்கும் என்பதால், அதனை நோட்டமிட்டேன். என் தலையை கண்டதும், உள்ளே இருந்த ஒரு மஞ்சள்சாரை வேகமாக முட்களுக்குள் ஓடி மறைய, மற்றொன்று என்னை கெணியாமல், நெடுநேரம் ஊர்ந்து விளையாடிக்கொண்டிருக்க, அதை இரசித்தபடியே என் மாலைநேரம் இரவுநேரமானது. ஓடையில் ஏறி இறங்கி, ஆல விழுதை தட்டிவிட்டவாறே, அங்கிருந்து வெளியேறி, வீட்டைநோக்கி நடைபோட்டேன்.
இரண்டு கால்களிலும் அரிப்பு ஏற்படத் தொடங்கியது. அது எதனால் என நன்கறிந்தாலும், இந்த மனத்திற்கு, Baader-Meinhof Effect-ன் படி, எது மீது அறியாமல் ஏறி நின்றேனோ, அதையே காரணமாக்கத்தான் விருப்பம். மனத்திற்கும் எனக்குமான போராட்டம் அவ்வப்போது அரங்கேறும். நான் மனமில்லை என்பது, அப்போதெல்லாம் எனக்கு புலப்பட்டுவிடும். இது ஒருவகை நகைச்சுவை; ஆன்மீகமல்ல.
சந்தட்டி இலைகளும், நாயுருவிகளும், வீடுதிரும்பும்போதெல்லாம், எங்களை விட்டு போகிறாயா என, என்னை வருடும். அந்த வருடல், அன்பினால் எனினும், அவற்றின் பண்பினால் கிடைத்த பலனே இவ்வரிப்பு. அவற்றையெல்லாம் மீறி நடக்கும் போது, நெருஞ்சி குத்தும் குத்திற்கு, எந்த வலியும் ஈடாகாது. அது, காலில் அணியில்லா என் காலம்; இது, கணினி பணியில் என் காலம். எனவே, நெருஞ்சிக்கு, சிறு ஏமாற்றம் தான்.
மீண்டும், கீழமறுவாவை தாண்டி, ஊருக்குள் செல்லும்போது, சிறிது திரும்பிப்பார்த்தால், இரவுக்கு தயாராகி, அமைதியை அணிகலனாக பூண்டு நிற்கும், நினைவுகள் ஊசலாடும் என் காடு! கருவாலி சத்தமும், காடைகளின் கூட்டமும், காட்டும் கள்ளிக்காடு! ஆள்காட்டி சத்தமும், அரிநொனஞ்சான் கீச்சலும், அரங்கேறும் அழகு காடு! ஈந்தடிமாடனுக்கும், ஈரக்காந்தளுக்கும் இல்லமான இருண்ட காடு! மொயலுடும்பு மாமயிலும், முள்ளெலி கீரிப்பிள்ளையும், முகிழ்ந்திருக்கும் முற்காடு!
இந்த நினைவுகள் தரும் சிறு வெளிச்சம், மனத்தோய்வு வாராமல், மங்காமல் என்னை அடுத்தமுறை வரை பிரகாசிக்கச்செய்யும்!
"நாளைக்கே திரும்பி வாறேன்", என்ற வார்த்தைகளோடு, சென்னை கிளம்புகிறேன்.
கருத்துகள்