மார்கழியின் முடிவால் மருகி, உருகி, வானம் வாரி இரைத்து கொண்டிருந்தது, நீரை. நான் என் வகுப்பறையில் இருந்து, வான் விடும் விண்ணீரை கண்டவாறு இருந்தேன்.

நான், 6 முதல் 10 வரை ஆண்டிபட்டியின் தொடக்கத்தில், அயோத்தியாபுரிபட்டணம் எனும் கிராமத்தில் உள்ள, அரசு உயர்நிலை பள்ளியில் படித்தேன். ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது நடந்த ஒரு சம்பவத்தை இங்கு எழுதுகிறேன். school

என் ஊரான காட்டூருக்கு, பள்ளியிலிருந்து நடந்தே சென்று விடலாம். சுமார் 1 கிமீ அளவிற்கு தான் தூரம். நானும், நடப்பேன்.காட்டூரின் அடர்ந்த முள் நிறைந்த பாறைகளில், காலணி இல்லாமல் நடந்து, நான் நன்கு பழகியிருந்தேன். காலணி இன்றி நடக்கும் பயிற்சி வெற்றிகரமாக முடிந்துள்ளதை காட்டும் வண்ணம், என் இரு பின்னங்கால்களிலும் வெடிப்புகள் சிறிது இருந்தன. இருப்பினும், வெறுங்கால் நடை வேண்டாம் என்று, காலணிகளை அணிந்திருந்தேன்.

பள்ளியை விட்டு வீடு செல்வது என்பது, என்னை பொறுத்த வரையில், ஓர் உலா. முதலில், பள்ளியின் அருகாமையில் என் நண்பர்கள், பேருந்திற்காக காத்திருப்பார்கள். அவர்களிடம் பேசியவாறே நான் வீட்டை நோக்கி, ரோட்டில் நடையிடுவேன். சிறு மேட்டினை ஏறி இறங்கினால், ஆண்டிபட்டியின் வீடுகள் முடிந்து, பொட்டல் காடு தென்படும். tomb-trees பொட்டல் காட்டில், வான் மேகங்கள் வலசை போகும் அழகு, கண்ணிற்கு விருந்தாகும். வானத்தை நீல நிறத்தால் தீட்டி, பின் தூரிகைகளை பூமியில் நட்டு வைத்தார் போல, பனைகள் வான் நோக்கி உயர்ந்து நிற்கும்.

மழை காலம் ஆதலால், வானம் கருப்பு நிறத்தால் தீட்டப்பட்டு இருந்தது. பனை மரங்களோ, முடிவிரிகோலத்தில் நிற்கும் மூளிகள் போல தோன்றின. கருவானம், மோகம் வரும்போதெல்லாம், பூமியை தனது மின்னல் கரங்களால் தொட்டு விளையாடியது.

நானோ வேகமாக வீடு நோக்கி நடையிட்டுக்கொண்டிருந்தேன். கருவேல மரங்களுக்கும், ஆங்காங்கே இருக்கும் சமாதிகளுக்கும் அருகே கரையான் கொத்தி தின்று, ஓடி விளையாடும் கருவாலிகளை அன்று காணவில்லை. பனைகளில் ஏறி வாலாட்டி விளையாடிக்கொண்டிருக்கும் அணில்களும், அரியின் கண்களில் அகப்படவில்லை. கீச்சிடும் புனில்கள், மையல் பார்வையிடும் மைனாக்கள் என, எந்த பறவைகளும் இல்லாமல், வெறும் பூமிமத்தளத்தில், வானசொட்டுக்கள் அறையும் இசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

தற்போதே இறந்தவரை புதைத்து, சுண்ணாம்பிடப்பட்ட புதைக்குழியின் மேல், வான்சொட்டுக்கள், வாஞ்சையோடு, அபிசேகம் போல் நீர்சொரிந்தன. அங்கே நட்டு வைக்கப்பட்ட பிரண்டை, நீர் தந்த குளுமையால், பல கிளைகளை விடுவதற்கு ஆயத்தமானது. புதைகுழியின் மேல் கவிழ்த்தப்பட்ட கலையமோ, உள்ளே உறங்குபவரின் தலைக்கு நீர் போகாத வண்ணம் தடுத்தது. நிச்சயமற்ற மரணத்தால், நித்திரை போனவரின் தூக்கம் முக்கியம்!

ரோட்டின் இடப்புறம் தெரியும் என் ஊர் குளத்தை பார்த்தவாறே, நான் வீடு நோக்கி நடந்தேன். எனக்கு போட்டியாக, இரு புறமும் நீர் ஓடிக்கொண்டிருந்தது. காட்டூருக்குள் நுழைந்ததை, கருத்த பெரும்பாறைகள் பறைசாற்றும்! சாற்றின! kaattoor-kulam பாறைகளில் சூந்து புற்கள் மஞ்சள் நிறத்தோடு நின்றன. அவற்றின் கிளைகள், மழைநீர் தந்த ஈரத்தை உறிஞ்சின. பச்சையாக, அவை இரண்டு நாட்களில் நிறம் மாறிடும். கள்ளிகளோ, நிலைப்பச்சை நிறத்தோடு நின்றன. செங்காந்தள் கிழங்குகள், பூமிக்கடியில், கருவறை விட்டு வெளிவரத்துடிக்கும் குழந்தைகளை போல, மழைநீர் பூமிக்குள் இறங்கியதும் கிளர்ந்தன. எனினும், இரண்டு மூன்று நாட்கள் எடுத்தால் தான், அது நிறை பிரசவம். paarai-in-kaattoor இசக்கியம்மன் கோவிலை தாண்டி, பள்ளி சீருடையோடு வீடு நோக்கி நடந்தேன். வடக்கே பார்த்தபடி இருக்கும் அம்மன் கோவிலையும் தாண்டி வீட்டிற்கு விரைந்தேன்.

வீட்டிற்கு வந்ததும், வாசலில் இருந்த என் பாட்டி, "இன்னா என் தங்கம் வந்துட்டு!", என்று கூறியவாறே சிரித்தாள். சிடு சிடு என இருக்கும் முகத்தை மலரச்செய்வது, அவளை காணும் நேரங்களில் மட்டும் தான். அவள் அரவணைப்பை போல கண்டதில்லை, காண்பதில்லை, காணப்போவதுமில்லை. பனங்கிழங்கை, நாருரித்து ஊட்டுவாள். பண்ணா மீனை, முள்ளெடுத்து ஊட்டுவாள். பருக்கை சோறையும், பக்குவமாய் ஊட்டுவாள்.

அவள் மீது மட்டும் தான், இந்த வாழ்வில் இவ்வளவு பிரியம். காலணிகளை கழற்றுவதற்காக, எப்போதும், வீட்டிற்கு முன்னே இருக்கும் தூண் கம்பியை பிடிப்பது என் வழக்கம். கொக்கு, ஒற்றை காலில் நிற்பது போல நின்று, வித்தை காட்டுவது நன்றாகவா இருக்கும். அந்த தூண் கம்பி, அன்று, மழைநீர் எங்கிருந்தோ கடத்தி வந்த கசிவு மின்சாரத்தை, பூமிக்குள் தள்ளும் வேளையில் இருந்துள்ளது.

அது தெரியாமல் அதை சக்கென பிடித்த என்னை, மின்சாரம் பீடித்தது. மின்சாரம், முதல் முறையாக என்னுள் பாய்ந்தது. வாய் மற்றும் கண்கள் இவை இரண்டும், பெரும் விசை ஒன்றால், வலுக்கட்டாயமாக மூடப்பட்டன. என்னால் பேசமுடியவில்லை. மாலை நேரம் எனக்கு மட்டும் வேகமாக இரவானது. நான், அவளது மலர்ந்த முகத்தை பார்த்தவாறே மண்ணில் சாய்கிறேன். அவள், நடப்பதறியாது இருந்தாள் போலும். நான் செத்துக்கொண்டிருந்தேன். மரணம் என்னை நெருங்குவதை மட்டுமே கடைசியில் உணர்ந்தேன். shock அம்மன் வடக்கு நோக்கி இருந்ததால், கிழக்கே நடக்கும் இந்த உயிர்பிரிதலை காணவில்லை. ஆனால், என் முன்னே இருந்தவள், எப்பேர்பட்டவள்! கணவன் கைவிட்டு ஓடிய போதும், பல இடர்களையும், பழிச்சொற்களையும் தாங்கி, பிள்ளைகளை, வளர்த்து ஆளாக்கியவள்! கடைசிவரை, வாழ்க்கையில் வலிகளை மட்டுமே சுமந்தவள்!

அவள் விரைந்து வந்து என்னை பற்றியிருக்கிறாள். என் மீது பாய்ந்த மின்சாரம், அவள் மீதும் பாய்ந்தது. என்றோ ஒரு நாள், அவள் மீது பாய்ந்த அம்மை நோய், என் மீதும் பாய்ந்த ஊழ் வினையோ என்னவோ! ஆனால், பூமியோடு நான் அதிகபடியான பரப்பை அடைத்ததனால், அவள் மீது பாய்ந்த மின்சாரம் சற்று குறைவுதான் போலும். அவள் சத்தமிட்டு அழ தொடங்கினாளாம். "என் தங்கமே, செல்லமே, நான் வளத்த கனியே!", என்று அழுதாளாம். பக்கத்து வீட்டார்கள் விரைந்து வந்தார்களாம். மின் பொத்தானை கண்டறிந்து, அமிழ்த்தி, மின்சார பாய்ச்சலை நிறுத்தினார்களாம். நான் எழுந்தேனாம்.

ஆம்! நான் கண்விழித்தேன்! வானம் அழுது முடித்திருந்த நேரத்தில், அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் கண்களில் நான் கண்ணீரை பார்த்த ஒரே ஒரு நாள், அது மட்டும் தான். அவள், பனை போல் மனமிருகியவள். ஆனால், தன் பேரனின் மீதான பிரியத்தாலும், பிரிந்துவிடுவானோ என்ற அச்சத்தாலும், அவள் இறுகிய மனம் உருகிற்று. இது நடந்த பின்னரும், ஆயிரம் இன்னல்கள் அவள் வாழ்வில் வந்துள்ளன. எதிலும் கலங்காதவள், நான் கலங்கிய நேரங்களிலெல்லாம் துணை நின்றவள், அன்று மட்டும் தான் கண்ணீர் வடித்தாள். இன்று நான் விடும் மூச்சும் சரி! நான் வளர்ந்து அடைந்த நிலையும் சரி! இரண்டுமே அவள் இட்ட பிச்சை! ராமலட்சுமியின் பேரன் என்பதில், எனக்கு ஆயிரம் பெருமை!

ஆனால்.... மின்சாரம் என் உடலில் பாய்ந்துகொண்டிருக்கும் வேளையில், மயக்க நிலையில், நான் உணர்ந்த சில விடயங்கள், அமானுசியமானவை. அவை என்னை, பல நாள் விடை தெரியாமல் உழற்றின. மனித மூளையின் சிக்கலான, பிரமிப்பான, நினைவலைகள்தானோ அவை! இல்லை, ஆன்மா என்பது உண்மையாக இருந்து, அது என் உடல் பிரிந்து, பறந்து கண்ட காட்சிகள் தானோ அவை! இன்றும் விடையில்லை.

நான் மயங்கியதும், நான் கடந்து வந்த அதே பாதையில் மீண்டும் சென்றது போல் இருந்தது. ஆனால், பறந்து சென்றது போல்... வேகமாக சென்றேன்... என் பள்ளியின் அருகே, என் நண்பர்கள் சிலர், பேருந்திற்காக இன்னமும் காத்திருந்ததை கண்டேன். பின்னர், திடீரென, வெண்ணிறம் என்னை சூழ்ந்தது. எங்கும் வெண்மை. என்னால் என்னை காண முடியவில்லை. ஆனால், எங்கும் நான் வெண்ணிறத்தை காண்கிறேன். உடல் எல்லாம், சுவை அரும்புகள் இருந்து, அங்கே எல்லாம் கருப்பட்டி வைத்தார்போல ஓர் உணர்வு... நான் மகிழ்ந்தேன்... சிரித்தேன்... flying-out-of-body

பின்னர், என் பாட்டியின் அழுகுரலை கேட்டேன்... இனிப்பு சுகத்தால், சிரித்த வண்ணம் இருந்த என் உதடுகள், இயல்பாகின. நான் எழுந்தேன். மின்சாரம் தாக்கியதையே மறந்திருந்தேன். பின், ஒவ்வொன்றாக நினைவில் கொண்டுவந்தேன்.

இந்த வினோத உணர்வு, என்னை பல நாள் விடை தேடி ஓடச் செய்தது. இணையவசதியோடு, ஒரு போன் கிடைத்த போது, அதில் பல பேர், மரண விளிம்பிற்கு சென்று மீண்டு வந்த போது, இதே உணர்வு கிடைத்துள்ளதை பகிர வாசித்தேன். இதற்கு, NEAR TO DEATH/OUT OF BODY EFFECT என்று அவர்கள் பெயரிட்டிருந்தனர். பின், பல வருடங்களுக்கு பிறகு, என் கல்லூரி ஆசிரியரிடம் இதை பகிர்ந்த போது, ரமணருக்கும் இது போல் நடந்திருப்பதை மேற்கோள் காட்டி, மரணத்தை தொட்டு மீண்டும் வாழ்விற்கு மீண்டதனால், ஏதோ ஒரு பெரிய காரணம் என் வாழ்விற்கு உள்ளதாகவும் அதை கண்டுபிடிக்குமாறும் அவர் கூறினார்.

அந்த Ikigai-யை இன்னும் சில வருடங்களில் கண்டுபிடிப்பேன் என எண்ணுகிறேன். ஆனால், இந்த உணர்வு, மூளை செய்த வேதி விளையாட்டா... இல்லை, என் ஆன்மா புரிந்த வீதி விளையாட்டா... என இன்றும் எனக்கு புரிந்தபாடில்லை. வான் வெளியில், இன்னும் மனித அறிவுக்கரங்களால் தீண்டப்படாமல் உறங்கும், வாலறிவுக்கே வெளிச்சம்.