சாம மர்த்த சாம மொன்றில் சந்திரன் ஒளிர்ந்திட
சாம்பல் சுடலை சாம்பல் சருமம் மேவியே நிறைந்திட
சங்கில் நஞ்சு தங்கிட சதங்கை பாதம் ஓங்கிட
சான்றோர் போற்றும் காசி தென்காசி விசுவ நாதமே!
கொத்து ருத்து ராட்சமாலை ருத்திரன் கழுத்திலே
குற்றாலத்து குளிர்ந்த நீரில் கூத்தன் கூந்தல் குளிக்குதே
கொன்றை சூடும் கோமகன் கோலம் கொண்டு நிற்பனே
சான்றோர் போற்றும் காசி தென்காசி விசுவ நாதமே!
உலகமை தன் உடன் உரை உத்தமன் உருத்திரன்
உருவம் அருவம் அருவுருவம் ஆகிய பவித்திரன்
உற்ற சாம வேளையில் நட்டம் பயிலும் நாயகன்
சான்றோர் போற்றும் காசி தென்காசி விசுவநாதமே!
பட்ட பாடு பயின்ற பனுவல் பத்திரங்கள் எத்தனை
பெற்ற அவ மானங்கள் பேய் மனிதர் எத்தனை
போதும் என்று பொசுங்கி சித்தம் போற்றுது சிவசித்தனை
சான்றோர் போற்றும் காசி தென்காசி விசுவநாதமே!
தென்னவன் எம் மன்னவன் தேகம் பாதி பெண்ணவன்
விண்ணவன் எம் கண்ணவன் வேட தாரி ஆனவன்
சொன்னவன் சிவா என சொந்தம் ஆகி நிற்பவன்
சான்றோர் போற்றும் காசி தென்காசி விசுவநாதமே!
எந்த மாந்தர் எம்மவர் என்று தேடி அலைந்தனே
நொந்த மனம் நோகுதே சொந்த தேகம் சோகுதே
வெந்த சாம்பல் எடுத்தணிந்த விந்தக விண் அமுதமே
சான்றோர் போற்றும் காசி தென்காசி விசுவநாதமே!
விழுந்த போது வீங்கி சிரிக்கும் சொந்தங்கள் வேதனை
எழுந்த பொது தாங்கி நிற்கும் பந்தங்கள் சோதனை
அழுந்த எந்த நேரமும் அணைக்கும் சொந்தம் சொக்கனே
சான்றோர் போற்றும் காசி தென்காசி விசுவநாதமே!
வீசுஞ் சாரல் விளங்கு முந்தன் தென்னகம் சிவம் சிவம்
பாசத் தென்றல் பாயும் பொதியை பதியதும் சிவம் சிவம்
கூசுங் கூதக்குளிர் குற்று ஆலவாய் சிவம் சிவம்
சான்றோர் போற்றும் காசி தென் காசி விசுவநாதமே!
நெற்றியி லொரு கண்ணனை நீலனை நெடுங் காலனை
பற்றிடும் படப் பாம்பனை பரமனை பர லோகனை
வெற்றி தரும் வீர வீர வீர விசுவநாதனை
சான்றோர் போற்றி சந்தமுற்று வாழ்வர் வாழைபோலவே!
கருத்துகள்