அந்தி சாயும் மாலைக்கருக்கல் நேரங்களில், கனத்த இருள், காட்டூரின் காடு மேடெல்லாம் நிரம்பும். ஆள்காட்டி குருவி பாடும் ஆலோலம், கவுதாரி பறவைகள் போடும் ஆரவாரம் என அனைத்தும் மறையும் நேரம் அது. நஞ்சுள்ள அரவங்களும், நட்டுவக்காலி முதலான உயிர்களும் உலாவும் நேரமும் அதுவே.
எனக்கு ஒன்பது வயதிருக்கும். காலில் கருவேலம் முற்களும், காக்கா முற்களும், நெருஞ்சி முற்களும் குத்தி, ஆங்காங்கே, வீங்கியிருப்பது வாடிக்கை. மேலும், பெருவிரலில் தேனீ கொட்டியதால், இன்றும் மறையாமல் இருக்கும் தழும்பு, அதை தடவி பார்க்கும் போதெல்லாம், அந்த காலத்திற்கு அள்ளிச் செல்கிறது. கைகளிலோ, பனங்கருக்கு கிழித்த தடங்களும், வேலிக்கருவைமுள் தந்த கோடுகளும் நிறைந்திருப்பது என் தனித்துவம் என வைத்துக் கொள்ளுங்களேன்.
எனக்கு உலகம் இரண்டு. ஒன்று, என் பார்வையில் அகப்படும், புறவுலகம். மற்றொன்று, என் புறத்தே இருப்பினும், என் அகத்தினுள் நான் சுமக்கும் மற்றொன்று. அது என் பாட்டி. என் தந்தையை பெற்றவள், ராமலட்சுமி.
என்றோ ஒரு நாள், மகாலிங்கநாடாருக்கு மகளாக பிறந்தவள், என் பல தலைமுறைகள் கொண்டிருந்த, சுடு வெயிலில் வேலை பார்த்து கூலி வாங்கி குடும்பம் நடத்தும் வாழ்வியலை உடைத்தெறிந்தாள். இன்று, என் கிராமத்திலும், என் தலைமுறைகளிலும் நானே முதல் மென்பொருள் பொறியாளன். காரணம், அவளே.
அந்திக்கருக்கலில், அவளது கையைப் பிடித்தவாறே, அவளோடு பயணமாவேன். ஊர் கண் பட்டுவிட்டால் மீண்டும், சப்பாணி மாடனுக்கும், இசக்கி அம்மனுக்கும் Packet Money + படையல் ஆக்கிப் படைக்க வேண்டியிருக்கும் என்பதனால், யார் கண்களுக்கும் படாதவாறு, அவளது சேலைக்குள் என்னை மறைத்துக்கொள்வாள். அடையில் இருக்கும் கோழி தான் பொரித்த குஞ்சுகளை இறகுகளால் காப்பதைப் பார்க்கும் போதெல்லாம், அந்நாளில் சேலைக்குள் நான் புகுந்த அடைக்கலமே மனதில் தோன்றும்.
பொத்தியவாறே, என்னைக் கூட்டிச் செல்வாள். அவள் கால்களில் பல வெடிப்புகள். ஒரு போதும் நல்ல காலணிகளை அணிந்ததில்லை. விறகு பொறுக்கச்சென்ற போதும், என்றோ ஒரு நாள் ஊர் சண்டையின் காரணமாக, நடு இரவில் கீழமருவா ஓடையைக் கடந்து, கரடுமுரடான பாதைகளில் ஓடிய போதும், வேப்பமுத்து பொறுக்கும் போதும், வயல்களில் வேலை பார்த்தபோதும் என எப்போதெல்லாம் சமயம் கிடைத்ததோ, அப்போதெல்லாம், கற்களும், முற்களும் அவளது கால் பாதங்களை, பதம் பார்த்திருந்தன.
அவளது கழுத்தில், பச்சை நிறத்திற்கு சற்றே மாறிய பித்தளைச் சங்கிலியும், அவளது மூக்கில், சற்றே கருத்த கருப்பு மூக்குத்தியும், அவளது காதுகளில், மலர் போன்ற வடிவமுடைய தங்க கம்மல்களும் இருந்தன. கம்மல்கள் மட்டுமே தங்கமாக மிஞ்சியிருந்தன. வளர்க்கும் பேரனை, வேலைக்கு அனுப்பும் முதல் நாள், அடகிற்குச் செல்லும் வரை.
அவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டே, அவளோடு என் நடைபயணம், ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு வீடு வரைக்கும் நீளும். புளிய மரத்தடியில் இருக்கும் இசக்கியம்மன் கோயில் வரும்போது, என்னை வலக்கை பக்கமாக வைத்து, இறுகப் பிடித்தவாறே, கூட்டிச்செல்வாள். கடைசியாக, ஊர் எல்லை நெருங்கும். அங்கே, தனியே ஒரு வீடு. அதைத் தாண்டினால், சற்று கருவை மரங்களும் பின் வயல்களும் தான். அந்த வீட்டில், வெளிப்புறத்தில் ஒரு பாய் விரித்துப் படுத்திருப்பார் சடையநாடார், என் பாட்டியின் உடன் பிறந்த தம்பி.
சடையர், ஊருக்கே பெரிய கோமரத்தானாவார். அம்மன், ஒவ்வொரு ஐப்பசிமாத கொடைக்கும், அவர் உடம்பில் மட்டுமே இறங்குவாள். பல காப்புகள் அணிந்த கைகளோடும், ஒரு பிரம்பு, ஒரு திரிசூலத்தோடும், ஒவ்வொரு வீடாகச் சென்று கொடை நாட்களில் அருள்வாக்கு சொல்லும், பெரிய சாமியாடி, சடையர். ஊரில் நோவு,நொடி நிலவும்போதெல்லாம், சடையர் வைக்கும் திருநீறே மருந்தானது.
நானும் என்னை வளர்த்தவளும் சென்றதும், படுத்திருக்கும் சடையர், எழும்பி உட்காருவார். சட்டை அணிந்திருக்கமாட்டார். ஒரு வெளிரிய நிறத்தில் சாரம் கட்டியிருப்பார். சிரித்த முகத்தோடு, "அக்கா வந்துட்டா" என்று அவரது மனைவியை நோக்கி ஒரு சத்தம் இடுவார். அவரது மனைவி, வாழை இலைகளை அரிந்து கொண்டுவந்து, எங்கள் இருவரிடமும் தந்துவிடுவார். பின்னர், சடையரிடம் இருக்கும் கலயத்திலிருக்கும் அன்னத்தை, எங்கள் இருவருக்கும் தன் கைகளால் அள்ளி வைப்பார். என் பாட்டிக்கு வைக்கப்பட்டிருக்கும் அன்னத்தில், எனக்கு கால் அளவு கூட இருக்காது. அவ்வளவுதான் நம்ம அளவு அப்போ! பின்னர், மற்றொரு கலயத்தை எடுப்பார். அதில், கொழுப்போடு மிதக்கும், பன்றி இறைச்சி, மசாலாவில் ஊறி மனத்தவாறு வெந்து கிடக்கும்.
இப்போது புரிகிறதா எனக்கு ஏன் அன்னத்தின் அளவு குறைவு என்று...
"முழு உடும்பு, முக்கா முசலு, அரக் காட, கால் ஆடு", என்று ஒரு சுவை வரிசை சொல்லாடல் என் கிராமத்தில் உண்டு. அவை அனைத்தையும் சுவை பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன், பன்றி இறைச்சியின் சுவை தனிதான்! சிரட்டையின் கண்ணிற்குள் நுழைந்து, மற்றொரு பக்கம் வெளிவரும், நீண்ட குச்சியால் ஆன கரண்டியால், கறியைக் கோதி வைப்பார், சடையர். வைக்க, வைக்க நான் உண்டு களிப்பேன். மண்ணெண்ணெய் விளக்கு மடல் மடலாய் எரிந்துகொண்டிருக்கும் அந்த அழகான ஒளி கலந்த இருளில், நான் பன்றி இறைச்சி தின்னும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை முடித்ததும், "சடையத்தாத்தா!", என்பென். அவரும், மற்றொரு கரண்டி கோதி வைப்பார். இப்படி, கோத கோத, நானும் தின்று கொண்டே இருப்பேன்.
ஐந்தாவது கோதல் நடக்கும்போது, சடையரது மனைவி சமுத்திரம், மாமாவுக்கு வேண்டும் என்று சத்தமிடுவார். சடையரின் மகன்களான, என் மாமாக்களுக்கு இல்லாமல் நான் தின்று கொண்டிருந்தேன் போலும். உடனே சடையர், கோபமான தொனியில் சிரித்தவாறே, அவரது மனைவியிடம், "என் அக்கா பேரன் சாப்பிட, மிச்சம் இருக்கத பாத்துப்போம்", என்பார். நான், எனக்கு வைத்த எல்லா கறியையும் சாப்பிட்ட பின்னர், மிச்சம் இருக்கும் அன்னத்தை என் பாட்டியிடம் வழக்கம் போல தள்ளிவிடுவேன். பின்னர், சற்று நேரம் பேசி முடித்ததும், ஓலையில் பொதிந்த கருவாட்டையோ அல்லது ஒரு மூடையில் இருக்கும் அரிசியையோ, என் பாட்டியிடம் சடையர் கொடுப்பார். அதை வாங்கிக்கொண்டு, மீண்டும் வீட்டிற்கு நடப்போம்.
சடையரின் முகத்தை நினைத்தவாறே உறங்கிப்போவேன், அவ்விரவுகளில்.
இவ்வாறு, விருவு, கீரி, உடும்பு என ஒவ்வொரு வாரங்களிலும், விருந்துக்கு அழைப்பார் சடையர். நானும் என் பாட்டியும், சென்று உண்டு, சிலாகித்து வருவோம். பின்னர், இரண்டு வருடத்தில், அம்மை முத்து போட்டதால், சடையர் உயிர் இழந்தார். அங்கே என்னை அனுமதிக்காத என் அப்பா, தான் மட்டும் சென்று தன் தாய்மாமனுக்கான கடைசி காரியங்களைச் செய்தார். என் பாட்டி, சடையரின் வீட்டில், இரண்டு வாரம் தங்கினாள். நான் அவள் இல்லாமல் உறங்கிய இரண்டு பெரிய வாரங்கள் அவை. பின், அவள் என் வீட்டிற்கு வரும்போது, அம்மை முத்துக்களோடு வந்தாள்.
அவள், நாக்கில் எல்லாம் முத்துக்கள். அவள், முதுகிலும் முத்துக்கள். அவள், கன்னங்களில் முத்துக்கள். அவள், கண் இமைகளில் முத்துக்கள். வேப்பிலை படுக்கையில் படுத்தும், அன்னப்பால் அருந்தியும், மஞ்சளில் குளித்தும் அவள் நாட்களை போக்கியவாறு இருந்துவந்தாள். பின்னர், அவள் குணமடைந்ததும், அவளோடு நான் உறங்க ஆரம்பித்தேன். என் முதுகில், ஒரு முத்து வந்தது. என்னையும் அவ்வாறு வேப்பிலையில் படுக்க வைத்து, மஞ்சள் குளியல் போட திட்டமிட்டாள் என் பாட்டி. ஆனால், அந்த முத்து, ஆலங்குளத்து மருத்துவரிடம் என் அப்பா என்னை ரகசியமாக அழைத்துச் சென்று போட்ட ஓர் ஊசியால் உடனே இறங்கியது.
இந்த நினைவுகள், என்றும் நெஞ்சம் விட்டு அகலாதவை. என் பாட்டியின் இருப்பு, என் வாழ்க்கையின் வசந்த காலங்களாகும். எவ்வளவு வேதை வந்தாலும், அவளது இரண்டு வார்த்தைகளில் நான் சமாதானமாவேன். ஆனால், கண்ணிமைபோல் காத்தவள், இன்று, காணாதது போல் உறங்குகின்றாள்! தொட்டில் கட்டி துயிலூட்டியவள், இன்று துடிப்பு இன்றி தூங்குகின்றாள்! வாழ்க்கை தந்த வலிகளை தாங்கியவள், இன்று வார்த்தைகள் இன்றி உறங்குகின்றாள்! வளர்த்த கடனை அடைக்கும் முன்பே, வருவேன் மகளாக என்று மறைகிறாள்! அழுத கண்களை துடைக்க இருந்தவள், என்னை அனாதையாக்கி அயலூரு செல்கிறாள்! ஆலமரம்போல அணைத்து காத்தவள் - மன ஆழத்தில் இன்று வேர்களாய் படர்கிறாள்!
ஒவ்வொரு இரவுகளிலும், கண்ணீராய்... அவள் நினைவுகள்...
கருத்துகள்